பிரபலமாகி வருகின்ற மெய்நிகர் அலுவலகங்கள் (Virtual Offices)

Sample meeting room in a Virtual Office

இன்று வணிக நடவடிக்கைகளுக்கும் அலுவலக நடவடிக்கைகளுக்குமான இடம் வாடகைக்கு பெற்றுக்கொள்வது செலவு மிகுந்ததாக இருக்கின்றது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் நமது சகல   செயற்பாடுகளையும் “ஒன்லைன்” (Online) மூலமாகவே செயற்படுத்த பல வசதிகள் நாளுக்கு நாள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. ஒருகாலத்தில் மேசைக் கணினிகள் (Desktop Computers) ,”பென்டிரைவ்” (Pen Drive) கள் பயன்படுத்திய காலங்கள் கழிந்து இன்று அனைத்தும் ஒன்லைனில் இணையவசதியுடன் சகல வேலைகளையும்  கையடக்க சாதனங்களின் உதவிகொண்டு முடிக்கக்கூடியதாகவும். தரவுகளை சேமிக்கக்கூடியதாகவும்  இருக்கின்றது.

தரவுகளை எங்கிருந்தும் எப்போதும் பெற்றுக்கொள்ளக்கூடியதாக மென்பொருள்கள் வடிவமைக்கப்படுகின்றன. Cloud Computing , IoT (Internet of Things ) சாதனங்களினால் இவை சாத்தியமாகி உள்ளது. பெரும்பாலான நிறுவனங்களும் நுகர்வோரும் Offline மென்பொருள்களை விரும்புவதில்லை.

அழைப்பு சேவை நிலையங்கள் (Call Center)

பல வருடங்களுக்கு முன்பாக சகல நாடுகளிலும் எமது நிறுவனத்திற்கான தொலைபேசி இலக்கங்களை இணையவழி நிறுவி அதற்கு வரும் அழைப்புக்கள யாவும் எமது நிறுவன தொலைபேசி இலக்கத்திற்கு திருப்பப்படும் வசதிகள் அறிமுகமாகியிருந்தன.தற்போதும் பிரபலமாக உள்ளன. இலாபமீட்டும் தொழிற்துறையாகவும் உள்ளது

வாடிக்கையாளர் அழைப்பு சேவை நிலையங்கள் எனும்போது வெறுமனே குறித்த நிறுவனத்திற்கான குறித்த தொலைபேசி இலக்கத்திற்குவரும் அழைப்புக்களை ஏற்று பதிலளித்து , குறித்த நிறுவனத்துடன் தொடர்புகளை பேணி நடவடிக்கை எடுக்கும் ஒரு நிலையமாக இருக்கும். இவ்வாறான நிலையங்கள் ஆசிய நாடுகளில் அதிகம். அவற்றில் அலுவலர்கள் இரவு பகல் கடமைகளில் மாறி மாறி ஈடுபடுவர். அதனால் பல்வேறு நாடுகளில் உள்ள நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் தொடர்பு கொண்டு சேவைகளை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

மெய்நிகர் அலுவலகங்கள்

இது வாடிக்கையாளர் அழைப்பு சேவை நிலையங்களை (Call Center) ஒத்திருப்பினும் அதனை விட சற்று வித்தியாசமானது.இந்த மெய்நிகர் அலுவலகங்கள் (Virtual Office) சற்று வேறுபட்டு குறித்த நிறுவனத்திற்கான கிளை நிறுவனம் போல தொழிற்படும். அதில் இடவசதி பெறும் நிறுவன அலுவலர்கள் எப்போதும் பணியாற்றப்போவதில்லை எனினும் சந்திப்புக்கள் மற்றும் சில குறிப்பிட்ட நாட்களில் மட்டுமான மட்டுப்படுத்தப்பட்ட பணிகள், குறுகிய அலுவல் நிறைவேற்றுதல், தபால் மற்றும் தொலைபேசி தொடர்பாடல்களை மேற்கொள்ளக்கூடிய வசதிகள் காணப்படும்.

குறித்த அலுவலக முகவரிக்கு வரும்  நிறுவனத்தின் கடிதங்கள் யாவும்  நிரந்தர தபால் முகவரிக்கு அனுப்பி வைக்கும் சேவையினை குறித்த அலுவலகம் செய்யும். சந்திப்புக்காகவும்  மாநாட்டுக்காகவும் பொது மற்றும் தனிப்பட்ட இடவசதிகளை மேலதிகமாக கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ள முடியும்.

அந்தவகையில் தற்போது மெய்நிகர் அலுவலகங்கள் (Virtual Office) பிரபலமாகிவருகின்றன. இதற்கு குறித்த நாட்டில் தபால் முகவரி இருக்கும். குறித்த நாட்டில் தொலைபேசி இருக்கும். தொலைபேசி அழைப்புக்களுக்கு பதில் சொல்லும் அலுவலர்கள் இருப்பார்கள். வாடிக்கையாளர்களுடன் சந்திப்பதற்கு வசதியான அலுவலக இடம் கூட பெற்றுக்கொள்ள முடியும்

இந்த வசதிகள் குறித்த மெய்நிகர் அலுவலகங்களை நிறுவ நாம் தெரிவு செய்யும் பொதிகளை (Packages) பொறுத்து மாறுபடும். இந்த நிலையங்கள் உலகின் பிரபலமான வர்த்தக மையங்களில் உள்ள கட்டிடங்களில் அலுவலகங்களை கொண்டிருக்கும். அதன்மூலம்  நிறுவன நடவடிக்கைகளை நேர்த்தியாக சகல நாட்டு வாடிக்கையாளருக்கு வழங்குவதுடன் முன்னணி நிறுவனமாகவும், நம்பிக்கையானதாகவும் பல்வேறு நாடுகளில் பிராந்தியங்களில் கிளைகளை கொண்ட பரந்த நிறுவனமாகவும் காட்டிக்கொள்ள முடியும். பிரபலமான மெய்நிகர் சேவை நிலையத்தின் ஊடாக மெய்நிகர் அலுவலகங்களை அமைப்பதன் ஊடாக நுகர்வோருக்கு மேலும் நம்பிக்கையினை ஏற்படுத்த முடியும்

இந்த வகை அலுலகங்கள் நாள் வாடகைக்கும் மாத வாடகைக்கும் வருட வாடகைக்கும் இணையவழியிலேயே பெற்றுக்கொள்ள முடியும். குறித்த அலுவலக இடத்தை பெற்றுக்கொள்ள முன்பாக அந்த இடத்தை சென்று பார்வையிடவும் வாய்ப்பளிக்கப்படுகின்றது. இவ்வாறான அலுவலகங்களில் பணியாற்றும் அலுவலர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்களுக்கு பதிலளிப்பவர்களாகவும் கடமையாற்றுபவர்களாகவும் இருப்பர்.இது வாடிக்கையாளருக்கு தெரியப்போவதில்லை. அதன்மூலம் குறித்த கட்டிடத்தொகுதிக்கான வாடகை மற்றும் அலுவலர் இதர செலவுகளை இந்த மெய்நிகர் அலுவலக சேவை வழங்கும் நிறுவனம் சமாளித்துக்கொள்ளும்.

மெய்நிகர் அலுவலகங்கள் (Virtual Office) வழங்குவதில் முன்னணி சேவை நிறுவனங்களாக உள்ளவை ServCorp, DaVinci Virtual, Regus ஆகியன காணப்படுகின்றன. அதை விடவும் நிறைய நிறுவனங்கள் இந்த சேவையினை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனங்களில் ServCorp முன்னணியாக திகழ்கின்றது.

எனவே நிறுவனங்களுக்கோ ஏனைய அமைப்புக்களுக்கோ ஏன் மின்வணிகங்களுக்கோ இனி இடம் என்பது கட்டாயமானதாக இருக்கவேண்டியதில்லை . அனைத்தும் ஒன்லைனில் பரிமாற்றப்பட்டு சிறு சந்திப்புக்களின் ஊடாக சகல நடவடிக்கைகளும் உலகமெங்கும் நிறைவேற்ற தற்போது வசதிவாய்ப்புக்கள் நிறையவே உள்ளது.

கடதாசி இல்லாத அலுவலக்த்தினை பில்கேற்ஸ் கனவாக கண்டார். தற்போது குறித்த நிறுவனத்தின் அலுவலர்கள் பணிக்கமர்த்தப்படாத அலுவலகங்கள் கிளைகள் உலகமெங்கும் பரவுவதற்கு இந்த மெய்நிகர் அலுவலகங்கள் வழிசமைக்கின்றன. இது நுகர்வோருக்கு ஒரு சவாலான விடயம் தான் எனினும் சரியாக விளங்கி கையாளப்படுமிடத்து சகலதும் சாத்தியமே!

இருப்பினும் இன்னும் அலுவலக இடங்களுக்கான நிலையான முகவரிகளின் தேவை எம்மைப்போன்ற வளரும் நாடுகளில் அவசியமாகவே இருக்கின்றன . வாடிக்கையாளர்களில் பெரும்பாலானவர்கள் அலுவலகத்திற்கு வந்து உறுதி செய்து சேவை பெறுவதை முற்றாக தவிர்க்க தயாரில்லை.

மேலும் வாசிப்புக்களுக்கு
http://fitsmallbusiness.com/best-virtual-office/

முன்னணி மெய்நிகர் அலுவலகங்களை (Virtual Office)  வழங்கும் நிறுவனங்கள்

  1. ServCorp
  2. DaVinci Virtual
  3. Regus

கட்டுரையாசிரியர் : தவரூபன்

Advertisement