இலங்கைத்தமிழ் பயனர்களு்கான விசைப்பலகை செல்லினத்தில் அறிமுகப்படுத்தப்படும் – முத்து நெடுமாறன்

யாழ்ப்பாணத்தில் முத்துநெடுமாறன்

வடக்கு  தகவல் தொழில்நுட்ப சம்மேளனத்தின் ஏற்பாட்டில் தொழில்நுட்ப உரையாடல் (Tech Talk) ஒன்று யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு  செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் முத்து நெடுமாறன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த அறிவிப்பினை கொழும்பிலும் உத்தமம் நிகழ்ச்சி ஒன்றில் குறிப்பிட்டிருந்ததாகவும் அதை வரலாற்று சிறப்பு மிக்க யாழ் பொதுநுாலக மண்ணடபத்தில் மீள அறிவிப்பதில் பெருமகிழ்வுறுவதாகவும் குறிப்பிட்டார்.

மொபைல் சாதனங்களில் தமிழில் தட்டச்சு செய்ய பயன்படுத்தும் செல்லினம் மென்பொருளையும் மற்றும் முரசு அஞ்சல் மென்பொருளையும் அப்பிள் நிறுவனத்தயாரிப்புக்களில் உள்ள தமிழ் விசைப்பலகை மென்பொருளையும் வடிவமைத்த மலேசியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப வல்லுனரும் முரசு நிறுவனத்தின் நிறுவுனருமான முத்துநெடுமாறன் அவர்களை முதன்முதலாக யாழ்ப்பாணத்திற்கு வரவழைத்து  மேற்படி  தொழில்நுட்ப செயலமர்வு 27.02.2017  திங்கட்கிழமை மாலை 2 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை யாழ் பொதுநுாலக கேட்போர் கூடத்தில் வடக்கு  தகவல் தொழில்நுட்ப சம்மேளனத்தினால் (NCIT) நடாத்தப்பபட்டிருந்தது.

தகவல் தொழில் நுட்ப சாதனங்களில் தமிழ் என்பது தொடர்பிலும் தொழில் நுட்பத்தில் தமிழ் சார்ந்த தொழில்முயற்சியான்மை அனுபவங்களையும் அவர் பகிர்ந்து பங்கேற்பாளர்களின் தொழில்நுட்பம் சார்ந்த கேள்விகளுக்கு விடைகளை பகிர்ந்தார். நிகழ்வில்  தமிழ் ஆர்வலர்கள் வடக்கு தகவல்தொழில்நுட்ப சம்மேளன இயக்குனர்கள்,  உறுப்பினர்கள் , மற்றும் தொழில்நுட்ப  ஆர்வலர்கள் மாணவர்கள் மென்பொருள் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் என பலதரப்பட்ட சுமார் 50 பேர் வரை கலந்து கொண்டு முத்துநெடுமாறன் அவர்களின் கருத்துரையினை செவிமடுத்ததுடன் கேள்விக்கணைகளை தொடுத்திருந்தனர். அத்துடன் சில வேண்டுகோள்களையும் அவரிடம் முன்வைத்திருந்தனர்.

தமிழ் உள்ளிடுமுறைகள் ஒருங்கிணைக்கப்பட்டப்பின் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், எழுத்துகளின் வடிவ அமைப்பும் அவற்றின் தன்மைகளும், கையடக்கக் கருவிகளில் பயன்படுத்தப்படும் செயலிகளும் அவற்றின் தமிழ்ப் பயன்பாடும் முதலிய தலைப்புகளில் முத்து நெடுமாறனின் படைப்பு அமைந்திருந்தது.

செல்லினம் மென்பொருள் பயன்பாட்டில் தற்போது இலங்கை 4வது இடத்திற்கு வந்துவிட்டதாகவும் இது அண்மைக்காலத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய உயர்வாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.கையடக்க சாதன்ங்களில் தமிழ் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை இலங்கையில் அண்மையில் அதிகரித்திருப்பதை இது காட்டுகின்றதாக அவர் புள்ளிவிபரங்களுடன் விபரித்தார். இனி தமிழ் தொழில்நுட்பத்தில் கூடிய இடம் பிடிப்பதற்கு உள்ள ஒரே வழி பயனர்கள் அதிகரிக்கப்படுவதே என்றும் அனைத்து பயன்பாடுகளிலும் விருப்பமொழியாக தமிழினை தெரிவு செய்வதன் மூலம் சிறப்பான மென்பொருள்களையும் வசதிகளையும் நிறுவனங்களிடம் வலியுறுத்தி கேட்டுப்பெற்றுக்கொள்ள முடியும் என்பதையும் வலியுறுத்தினார்.

யாழ் நிகழ்வில் கலந்து கொண்டவர்களில் ஒருபகுதியினர்

பேசப்பட்டக் கருத்துகளுள் முதன்மையாக இலங்கையில் பயன்படுத்தப்படும் தமிழ் தட்டச்சு விசைப்பலகை அமைப்பும் (keyboard layout) மின்னணு  சாதனங்களில் தட்டச்சு செய்யும் போது கிடைக்கும் பரிந்துரைகளில் (word suggestions) இலங்கையில் பயன்படுத்தப்படும் சொற்களும் இடம்பெறவேண்டும் என்பதும் இருந்தது.

தமிழ்த் தட்டச்சு முறைக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட ‘பாமினி’ என்னும் எழுத்துரு இலங்கையில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் ஒரு எழுத்துருவாகும்.  பல ஆண்டுகளாக இந்த எழுத்துருவை அடிப்படையாக கொண்ட விசைப்பலகை  முறையைக் கொண்டே தமிழில் எழுதிப் பழகிய பயனர்கள் வேறு தமிழ் உள்ளிடு முறைக்கு மாறுவதற்கு, பல சிரமங்களைக் கண்டனர்.

2007ஆம் ஆண்டு இலங்கையின் ICTA அமைப்பு, இலங்கைக்கான முறையான தமிழ் விசைபலகை ஒன்றை உருவாக்கவேண்டும் என்ற நோக்கில், ஓர் ஆய்வினை மேற்கொண்டது.  இறுதியில் ‘பாமினி’ எழுத்து ஒழுங்கு அமைப்பையே தேர்ந்தெடுத்து, யூனிகோடு முறைக்காக சில மாற்றங்களை மட்டுமே செய்து ‘SL Tamil Keyboard 2007’ என்ற பெயரில் அதனை வெளியிட்டது ICTA அமைப்பு. இந்த விசைமுகத்தின் மற்றொரு பெயர் ‘ரெங்கநாதன் விசைப்பலகை’.

இந்த விசைப்பலகையினை செல்லினம் மென்பொருளில் இணைக்கவேண்டும் என்பதே பலரின் வேண்டுகோளாக இருந்தது.

கணினிக்காக வடிவமைக்கப்பட்ட இந்த விசைப்பலகை  கட்டமைப்பை கையடக்கக் கருவிகளில் எவ்வாறு சேர்க்கலாம் என்பது குறித்து முதலில் சில ஆய்வுகளும், உரியவர்களுடன் சில கலந்துரையாடல்களும் நடத்தப்படும் என்றும், அதன் பின்னரே செல்லினத்தில் இந்த அமைப்பு சேர்க்கப்படும் என்றும் முத்து நெடுமாறன் கூறினார்.

NCIT வழங்கிய விருந்துபசாரத்தில் முத்துநெடுமாறன்

அவ்வாறே  செல்லினத்தைக் கொண்டு தமிழில் உள்ளிடும்போது இலங்கையில் பயன்பாட்டில் உள்ள பல வட்டார வழக்குச் சொற்கள் பரிந்துரைகளாகத் தோன்றுவதில்லை என பலர் குறைபட்டுக் கொண்டனர்.  இதற்கு எளிதாகவே தீர்வு கண்டுவிடலாம் என்றும், ‘இலங்கைத் தமிழ்’ சொற்கள் அதிகம் அடங்கிய தரவகம் (corpus) இருந்தாலே போதும் என்றும் முத்து நெடுமாறன் கூறினார். கூட்டத்தில் இருந்த ஆர்வலர்கள் அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய உடனே முன்வந்தனர்.

கொழும்பு நிகழ்வில் முத்து நெடுமாறன்

முன்னதாக 26ம் திகதி காலை ”உத்தமம்” அமைப்பில் ஏற்பாட்டில் கொழும்பிலும் ஒரு  நிகழ்வு இடம்பெற்றிருந்தது.  அந்நிகழ்விலும் ஊடகவியலாளர்கள், நுட்பவியலாளர்கள், மாணவர்கள் மற்றும் பொதுப் பயனர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Advertisement