மொபைல் அறிவோம்!

எப்போதும் மொபைல் போனை நோண்டிக் கொண்டிருப்பவரா நீங்கள்? அந்த மொபைல் போனை சரி வர உபயோகிக்கவும் தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் மொபைல் போனில் உள்ள எண்களில் 0 மற்றும் 1 ஆகிய எண்களின் இடத்தில் எழுத்துக்கள் எதுவும் இணைக்கப்படவில்லை. அதனால் 0 மற்றும் 1 ஆகிய எண்கள் Flag எண்கள் என அழைக்கப்படுகின்றன.

எனவேதான் இந்த 0, 1 ஆகிய எண்களைப் பயன்படுத்தி உலகின் பல நாடுகளில் அவசர எண்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவசர அழைப்பிற்கு 100 எண் என்று பயன்படுவதும் இதில் ஒன்று. நீங்கள் மொபைல் வாங்கி இயக்கத் தொடங்கியவுடன் *#06# என்ற எண்ணை அழுத்தி உங்கள் மொபைலுக்கான அதன் தனி அடையாள எண்ணை (IMEI – International Mobile Equipment Identity) கண்டிப்பாகத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அந்த 13 இலக்க  IMEI எண்ணை எங்காவது பத்திரமாகக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

உங்கள் மொபைல் போனுக்கான வாரண்டி இதனைச் சார்ந்ததாகத்தான் வழங்கப்படும். அது மட்டுமின்றி உங்கள் மொபைல் தொலைந்து போனால், எடுத்தவர்கள் உங்கள் சிம் கார்டை அழித்து விட்டாலும் கூட இந்த எண்ணைக் கொண்டு எளிதாக போனைத் தேடிக் கண்டுபிடித்து விடலாம்.

அனைத்து மொபைல் போன்களிலும் மொபைல் போனில் சிக்னல்கள் எந்த அளவில் பெறப்படுகின்றன என்பதைக் காட்டும் இண்டிகேட்டர்  இருக்கும். இது அளவு குறைவாக இருக்கும்போது உங்கள் மொபைலின் கதிர்வீச்சு அதிகமாக இருக்கும். சரியாக இருக்கும்போது மிதமாக இருக்கும். மலிவான சீன தயாரிப்பு போன்களில் இன்னமும் அதிகமாக கட்டுப்பாடின்றி இருக்கும்.

மேலும் அந்த சிக்னல் இண்டிகேட்டர் அளவு  குறைவாக இருக்கையில் மொபைல் பேட்டரி மின் சக்தி அதிகம் செலவாகும். எனவே உங்களால் முடிந்த அளவு சிக்னல் குறைவாக இருக்கும் இடத்தில் இருந்து பேசுவதைத் தடுக்கவும். அதனால் உங்கள் மொபைல் பேட்டரி  மின்சக்தி இழப்பது தடுக்கப்படுவது மட்டுமின்றி, உங்களுக்கு கதிர்வீச்சால் ஏற்படும் பாதிப்புகளும் குறையும்.

திரையில் உள்ள லிக்விட் கிறிஸ்டல் டிஸ்பிளே (LCD) மீது மிக அழுத்தத்தைப் பயன்படுத்தினால்  திரை கெட்டுவிட வாய்ப்பு உள்ளது. முடிந்த அளவு மெதுவாக அழுத்தத்தைப் பிரயோகியுங்கள்.உங்கள்  சட்டைப் பையில் போனை வைக்கும்போது, சட்டைப் பையில் உள்ள ஏதேனும் கூர்மையான அல்லது பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய பொருள், மொபைல் போனுடன் உரசிக் கொண்டிருக்கிறதா என்பதைக் கவனித்துச் செயல்படவும். மொபைல் திரைக்குக் கீறல்கள் ஏற்படாத வகையில்  பாதுகாப்பு கொடுக்கலாம்.

இதற்கென தனி ‘ஸ்க்ரீன் கார்டு’ பேப்பர் விற்கப்படுகிறது; ‘டெம்பர்டு கிளாஸ்’ எனப்படும் கண்ணாடியும் ஒட்டிக்கொள்ளலாம். இதுதவிர மொபைல் போனுக்கு ஒரு கவர் போட்டால், கீழே விழுந்தால் உடையாமல் தடுக்கலாம்.

உங்கள் நெட்வர்க் பரப்பைத் தாண்டி சிக்னல் இல்லாத ஏரியாவுக்கு வந்துவிட்டீர்களா? உங்கள் மொபைல் போன் இணைப்பை நிறுத்துவதுதான்  நல்லது. இல்லை என்றால் மொபைல்  அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தி இணைய இணைப்பைத் தேடும். அதற்கு மொபைலின் பேட்டரி சக்தி வீணாகிக்கொண்டிருக்கும்.

– சீ.சுப்பிரமணியன், தூத்துக்குடி.

Advertisement