கூகுளின் பிக்ஸல்(Pixel) திறன் பேசி(Smart Phone) உள்ளிட்ட வெளியீடுகள்

வானிலை போலவே, தொழில்நுட்ப  உலகமும் நிலையானது கிடையாது. அதற்கேற்ப அண்மையில் கூகுள் புதிய அறிவிப்புகள் சிலவற்றை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோ நகரில் இம்மாத முதல்வாரத்தில்  நடந்த நிகழ்ச்சியில் கூகுள் நிறுவனம் தங்களின் புதிய திறன்பேசிகளான பிக்சல் மற்றும் பிக்சல் XL, புதிய Google Home என்னும் ஸ்மார்ட் ஸ்பீக்கர் , கூகுள் அசிஸ்டன்ட், புதிய வேர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட், WiFi ரௌட்டர் மற்றும் புதிய கிரோம்காஸ்ட் அல்ட்ரா என்னும் ஓடியோ, வீடியோ டொங்கிள் என தொழில்நுட்ப சந்தையில் புதிய போட்டியாளர்களை களமிறக்கியுள்ளது சமீபத்தில் தனது பதினெட்டாவது பிறந்தநாளைக் கொண்டாடிய கூகுள்.

நிகழ்ச்சியில் முதலில் பேசிய, கூகுளின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, உலக மக்களிடையே எப்படி எவ்வித வேறுபாடும் இல்லாமல் கூகுளின் தேடுபொறி இயந்திரம் பயன்படுகிறதோ அதேபோன்று வருங்காலத்தின் தவிர்க்கமுடியாத இணைப்பான ஸ்மார்ட்போன் மற்றும் பர்சனல் வாய்ஸ் அசிஸ்டெண்ட்டிலும் கூகுள் முன்னிலை வகிப்பதற்கான பல முன்னோடித் திட்டங்கள் செயற்படுத்தப்படவிருப்பதாக தெரிவித்தார். சுமார் 100 நிமிடங்கள் நடந்த இந்நிகழ்ச்சியில் ஒன்றன் பின்னொன்றாக பல அறிவிப்புகள் கூகுளின் தொழில்நுட்ப வல்லுநர்களால் வெளியிடப்பட்டன. அவற்றின் அறிமுகங்கள் இங்கே..

1. பிக்சல் மற்றும் பிக்சல் XL திறன்பேசிகளின் சிறப்பம்சங்கள்:

திரை:

பிக்ஸல்  5” அங்குல 1080p திரை மற்றும் 1920×1080 Resolution கொண்டது.

பிக்ஸல் XL வகையானது  5.5” அங்குல Quad-HD  திரையுடனும் 2560×1440 Resolution ஐயும் கொண்டது.

நிறை:

பிக்ஸல் 140 கிராம் நிறையும் பிக்சல் XL 168 கிராம் நிறையும் கொண்டுள்ளது.

Processor (நுண்செயலி)

பிக்ஸல் மற்றும் பிக்சல் XL ஆகிய இரண்டும் 4 ஜிபி தற்காலிக நினைவகத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Qualcomm நிறுவனத்தின் அதிவேகமான புதிய நுண்செயலி  Snapdragon 821 சிப்கள் இந்த இரண்டிலும் பொருத்தப்பட்டுள்ளன.

Camera

பிக்ஸல் மற்றும் பிக்ஸல் XL ஆகிய இரண்டும் 12.3 மெகாபிக்சல் பின்பக்க கமராவும், 8 மெகாபிக்சல் முன்பக்க கமராவும் கொண்டுள்ளது. இதுவரை வெளியிடப்பட்ட அனைத்து நிறுவனங்களின் கைத்தொலைபேசி கமராக்களிலேயே இந்த பிக்ஸல் கைத்தொலைபேசியே சிறந்தது என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.

மின்கலம்

பிக்ஸல் 2770 mAH மின்கல திறனும், பிக்சல் XL 3450 mAH திறனும் கொண்டுள்ளது. இந்த இரண்டு திறன்பேசிகளும் 15 நிமிடங்கள் மின்னேற்றம் செய்தால் 7 மணிநேரங்கள் பயன்படுத்தலாம் என்கிறது கூகுள்.

நிறம்:

இந்த இரண்டு திறன்பேசிகளும் வெரி சில்வர், ரியல்லி ப்ளூ, கொய்ட் பிளாக் ஆகிய மூன்று நிறங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

கூகுள் உதவி:

கூகுளின் பிரத்யேகமான பிரத்தியேக ஒலி உதவி முதல்முறையாக இந்த திறன்பேசிகளுடன் இணைத்து வெளியிடப்பட்டுள்ளது.

ஒலி:

ஹெட்போன்  இணைப்பானை எடுத்து வாடிக்கையாளர்களின் எதிர்ப்பை வாங்கிக்கொண்ட அப்பிள் நிறுவனம் செய்த தவறை கூகுள் செய்யவில்லை. இந்த இரண்டு திறன்ளிபேசிகளிலும் 3.5mm ஹெட்போன் இணைப்பான் வழக்கம்போலவே உள்ளது.

பாதுகாப்பு :

மொபைல்போன்களின் தகவல் பாதுகாப்பு என்பது மிகவும் அவசியமாகிவிட்ட இக்காலத்தில் இந்த இரண்டு மொபைல்களுமே ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் வசதியை கொண்டுள்ளது.

சலுகைகள்:

பிக்ஸல் மற்றும் பிக்சல் XL திறன்பேசிகளை வாங்குபவர்களுக்கு அளவில்லாமல் தாங்கள் எடுக்கும் நிழல்பட்கள் மற்றும் காணொளிகளை மேகக்கணினியில் (கிளவுட்) இலவசமாக சேமித்துக்கொள்ளலாம். மேலும் 24X7 நேரமும் தொழில்நுட்ப உதவியை தொலைபேசி மற்றும் குறுஞ்செய்தி மூலமாக பெற முடியும்.

விலை

பிக்ஸல் மற்றும் பிக்சல் XL ஆகிய இரண்டு வகைகளுக்கான முன்பதிவு  இம்மாதம்தொடங்குகிறது. 32GB, 128GB நினைவகம் உடைய பிக்சலின் தொடக்க விலையாக 649 டொலர்களும், அதே 32GB, 128GB நினைவகம் உடைய பிக்சல் XL  769 டொலர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிக்ஸல் திறன்பேசியின் விலை சுமார் ரூ 90,000-த்தில் இருந்து துவங்குகிறது.

2. புதிய VR ஹெட்செட்:

சினிமா, பொழுதுப்போக்கு, விளையாட்டு, செய்திகள் போன்றவற்றின் எதிர்காலமாக கருதப்படும் வேர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தை கைத்தொலைபேசியில் காண உதவும் புதிய “Daydream” VR ஹெட்செட்டை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிதாக வெளியிடப்பட்டுள்ள பிக்ஸல் மற்றும் பிக்ஸல் XL  கைத்தொலைபேசிகளுக்கு மிகவும் ஏற்றதாக இதை தெரிவித்துள்ள கூகுள் இதை வாங்குபவர்களுக்கு பல்வேறு சலுகைகளையும் அறிவித்துள்ளது. இதன் தொடக்க விலையாக $79 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது நவம்பர் மாதம் முதல் விற்பனைக்கு வருகிறது.

3. Google Home :

உங்கள் வீட்டிலுள்ள ஸ்மார்ட் பொருட்கள் மற்றும் சாதனங்களை வெறும் பேச்சின் மூலம் இயக்கும் இந்த கூகுள் ஹோம் என்னும் ஸ்மார்ட் ஹோம் அசிஸ்டன்ட்டில் பல புதிய சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. உங்களின் பயணத்திட்டங்கள் குறித்தும், வானிலை நிலவரம், செய்திகள், போக்குவரத்து நிலைமை போன்ற பல்வேறு தகவல்களை கேட்டவுடன் உடனடியாக இந்த ஸ்மார்ட் ஸ்பீக்கர் தரும். 6 மாத இலவச You tube Red சந்தாவுடன் கூடிய இது  நவம்பர் மாதம் முதல் $129 மற்றும் $299 விலையில் கிடைக்கும்.

4. Google WiFi:

இதற்கு முன்பு மற்ற முன்னணி வைஃபை ரௌட்டர் நிறுவனங்களுடன் இணைத்து பணியாற்றிய கூகுள், முதல் முறையாக தனது பெயரில் இதை வெளியிட்டுள்ளது. நிலையான இணைய வேகம், அதிக கவரேஜ் மற்றும் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ரௌட்டரை கூகுள் வெளியிட்டுள்ளது. உங்கள் வைஃபை இணைப்பை பயன்படுத்துபவரின் பயன்பாட்டை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் முடியும். இது வரும் நவம்பர் மாதம் முதல் $129 மற்றும் $299 விலையில் கிடைக்கும்.

5. Chromecast Ultra:

உங்களின் மொபைல் மற்றும் டேப்லெட்டுகளை இந்த கூகுள் கிரோம்காஸ்ட் அல்ட்ராவுடன் இணைப்பதன் மூலம் உங்களின் டிவியில் வீடியோக்கள் மற்றும் ஆடியோக்களை ப்ளே செய்யமுடியும். மேலும் கூகுள் பிரத்யேகமான யூடுப் சேவைகளையும், Netflix, Vudu-வின் சேவைகளை 4K தரத்தில் காணவியலும். முந்தைய பதிப்பை விட 1.8 மடங்கு வேகமானது என்று குறிப்பிட்டுள்ள கூகுள் இது $69 விலையில் அடுத்த மாதம் முதல் விற்பனைக்கு வரும் என்றும் அறிவித்துள்ளது.

தகவல் மூலம் : விகடன்

மேலும் தகவல்களுக்கு https://madeby.google.com/phone/

Advertisement